பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா
பாலுமகேந்திரா இயக்கிய படம் 'வீடு'. ஒரு நடுத்தர வர்க்கத்து பெண் சொந்தமாக ஒரு வீடு கட்டும்போது சந்திக்கும் பிரச்னைகளை நெகிழ்ச்சியோடு சொன்ன படம். இந்த படத்தில் நடித்த அர்ச்சனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பிராந்தியமொழி பட வரிசையில் சிறந்த படத்திற்கான விருது வீடு படத்திற்கு கிடைத்தது.
பாலு மகேந்திரா படம் என்றாலே இளையராஜாதான் இசை என்பது எழுதப்படாத விதி. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தாக டைட்டில் கார்டு வரும். ஆனால் உண்மையில் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. அவரது இசை படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த படம் உருவானபோது இளையராஜா மிகவும் பிசியாக இருந்தார். மிகச்சிறிய படம் என்பதால் இளையராஜாவிற்கு உரிய சம்பளத்தையும் பாலுமகேந்திராவால் கொடுக்க இயலவில்லை.
இதை தொடர்ந்து இளையராஜாவை சந்தித்த பாலுமகேந்திரா. 'உங்கள் இசை இன்றி என் படம் நிறைவடையாது. 'நீங்கள் பிசியாக இருப்பதால் உங்கள் இசையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்' என்றார். அதற்கு இளையராஜா 'எனது பழைய பாடல்களை பயன்படுத்திக் கொள்ளப்போகிறீர்களா?' என்றார். அதற்கு உங்களின் இசை ஆல்பமான 'ஹவ் டூ நேம் இட்க் என்னும் தொகுப்பிலிருந்து பொருத்தமான இசைக் கோர்வைகளைப் பயன்படுதிக் கொள்கிறேன் என்றார். அதற்கு இளையராஜாவும் சம்மதித்தார். வசனங்கள் இல்லாத காட்சிகளில் ஆல்பத்தின் இசையை பயன்படுத்தினார். வேறு சில இடங்களில் மவுனத்தையே இசையாக பயன்படுத்தினார்.