ஒரு மாதம் தள்ளிப்போன பேட்ரியாட் ; புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் 'பேட்ரியாட்'. ராணுவ பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை விஸ்வரூபம் பட எடிட்டரும் 'டேக் ஆப், மாலிக்' உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். மம்முட்டியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 23ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் முதல் வார வசூலில் பங்கு பிரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேட்ரியாட் படத்தை திரையிட மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனாலும் இந்த சிக்கல் எளிதாக தீர்க்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மே 1ம் தேதிக்கு மாற்றி வைத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மம்முட்டி. ஏற்கனவே உள்ள வசூலில் பங்கு பிரிப்பது தொடர்பாக பிரச்னை தான் இதற்கு காரணமா அல்லது வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் காரணமாக தள்ளிப்போகிறதா என்பது குறித்து விரிவான தகவல் எதுவும் தெரியவில்லை.