உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர்

பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர்


தமிழ் திரையுலகில் ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் ஒரு மகத்தான திரைக்கலைஞராகப் பயணித்து, 136 திரைப்படங்கள் வரை நடித்திருக்கும் மக்கள் திலகம் எம் ஜி ஆர், ஒரு துணை நடிகராக, கதையின் நாயகனாக என பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, ஒரு தனிப்பெரும் ஆளுமையாக கலையுலகின் உச்சம் தொட்டவர். இவர் நடித்திருக்கும் மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கையில் அதிகப்படியான எண்ணிக்கையைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்த ஒரு நிறுவனம் என்றால் அது “தேவர் பிலிம்ஸ்”. எம் ஜி ஆரை வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த இந்த பெருமைக்குரிய நிறுவனத்தின் அதிபர்தான் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.

1941ம் ஆண்டு “ஜுவல் பிக்சர்ஸ்” என்ற ஒரு தயாரிப்பு நிறுவனம், என் சி வசந்த கோகிலம், வி வி சடகோபன், எம் வி மணி ஆகிய நடிகர்களை வைத்து, இயக்குநர் முருகதாஸா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வந்தது. இந்தப் படத்தில் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கும் அவரது அண்ணன் பயில்வான் சுப்பையா தேவருக்கும் முகம் தெரிகின்றாற் போல் ஒரு சிறிய வேடமும் தரப்பட்டிருந்தது. படப்பிடிப்பின் போது ஒரு நாள் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் எம் வி மணியைப் பார்க்க யாரோ ஒருவர் வந்திருப்பதாக படக்குழுவினரில் ஒருவர் வந்து சொல்ல, மணியின் நண்பரான அந்த இளைஞரும் உள்ளே வர, வந்த இளைஞரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.

செக்கச் செவேலென கம்பீரமான உருவம், பாகவதர் கிராப், களையான முகம், தும்பைப் பூ போன்ற கதர் வேஷ்டி, ஜிப்பா, கழுத்தில் தாமரை மணி மாலை சகிதமாய் வந்து நின்ற அந்த இளைஞரைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருந்தார் சாண்டோ சின்னப்ப தேவர். வந்திருக்கும் அந்த இளைஞர் யார்? என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இருந்த சின்னப்ப தேவருக்கு சில மணித்துளிகளிலேயே தெரிந்தது வந்திருப்பவர் எம் ஜி ராமச்சந்திரன் என்று.

எம் ஜி ஆர் பார்க்க வந்த நடிகர் எம் வி மணி, அப்போது நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் “ஜுவல் பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த “வேணுகானம்” என்ற திரைப்படம். அன்று சின்னப்ப தேவரால் ஈர்க்கப்பட்ட எம் ஜி ஆர்தான் பின்னாளில் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான “தேவர் பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பட நாயகனாக நடித்திருந்ததோடு, தேவர் பிலிம்ஸின் அதிகப்படியான படங்களின் நாயகனாகவும் நடித்த சிறப்புக்குரியவராகவும் பார்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !