உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும்

83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும்


இன்னும் சில வாரங்களில் 83வது பிறந்தநாள் கொண்டாடப்போகிறார் இளையராஜா. இதுவரை 8,600 பாடல்களை தந்து இருக்கிறார். 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். ஆனாலும், இப்போதும் பிஸியாக இருக்கிறார். தனது 50வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் போது கூட, ஸ்டூடியோவில் இந்தி பட இயக்குனர் பால்கி இயக்கும் படத்தின் பாடல் பதிவில் இருந்தார்.

இந்நிலையில், அவரின் 1540வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். இது, அவருக்கு 10வது படம். ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து பேசியுள்ள இளையராஜா, எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்பராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்”

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம்' என்றார். இதில் நடிப்பவர்கள் பற்றி விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !