அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள்
2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை நேற்றோடு 100ஐக் கடந்துவிட்டது. சுமார் ஐந்து மாதங்களில் 100 படங்கள் என்றால் எஞ்சியுள்ள ஏழு மாதங்களில் மேலும் 100க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு பதவியேற்ற பிறகு புதிய படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏதாவது ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வந்துவிடுகிறது. ஆகஸ்ட் மாதம் வரையிலான பல படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ன.
அடுத்த வாரம் ஜூன் 12ம் தேதியன்று, “ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், வள்ளுவன், வருகை பதிவேடு,” படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 19ம் தேதி 'நூறு சாமி, ஜூன் 25ம் தேதி 'அந்தரன், அனந்தன் காடு,', ஜூன் 26ம் தேதி 'ப்ராமிஸ்' ஆகிய படங்கள் இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள ஜூன் மாதத் திரைப்படங்கள்.
ஜூலை 3ம் தேதி 'கட்டா குஸ்தி 2', ஜூலை 10ல் 'இதயம் முரளி', ஜூலை 17ல் 'ஜிடிஎன்' ஜூலை 31ல் 'சிக்மா' ஆகிய படங்களும், ஆகஸ்ட் 14ல் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல படங்களின் அறிவிப்புகள் வரும் வாரங்களில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
ஆனாலும், விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கும் 'ஜனநாயகன்' படத்தின் அறிவிப்பு வருமா என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.