சோனி லிவ் ஓடிடி தளத்துடன் புதிய அத்தியாயத்தை தொடங்கும் சமந்தா
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்து கடந்த ஜூன் 19ம் தேதி திரைக்கு வந்த படம் ‛மா இன்டி பங்காரம்'. தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். சமந்தாவுடன் இணைந்து அவரது கணவராக ராஜ் நிடிமொருவும் தயாரித்தார். கதையும் அவரே எழுதியிருந்தார். இந்த படம் 100 கோடியை எட்டி இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. மா இன்டி பங்காரம் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட போது, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதையடுத்து அவர் அதை உறுதிப்படுத்தியதோடு, தான் சில காலம் ஓய்வில் இருக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சோனி லிவ் ஓடிடி தளத்துடன் சமந்தா கைகோர்க்க போவதாக தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் லைவ் நிகழ்ச்சி நடத்த போகிறாரா? அல்லது சோனி நிறுவனத்தின் வெப் சீரியலில் நடிக்கப் போகிறாரா? என்பது தெரியவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்துள்ளார்கள்.
அதோடு, சமந்தா வெளியிட்டுள்ள செய்தியில், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த ஆண்டு எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. சோனி லிவ் தமிழுடன் புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சிக்காக நாங்கள் உழைத்து வருகிறோம். அது பற்றிய தகவல்களை விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.