உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கர, ஜனநாயகன்' தோல்வி ராசியை மாற்றுவாரா மமிதா பைஜூ

'கர, ஜனநாயகன்' தோல்வி ராசியை மாற்றுவாரா மமிதா பைஜூ


2024ல் வெளியான 'ரெபெல்' படத்தின் மூலம் மலையாள நடிகையான மமிதா பைஜூ தமிழில் அறிமுகமானாலும் அந்தப் படத்தை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதே சமயம் அவர் நடித்து வெளிவந்த 'பிரேமலு' மலையாளப் படத்தைப் பார்த்து ரசித்தார்கள்.

கடந்த வருடம் வெளிவந்த 'டியூட்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் ஒரு இடத்தைப் பிடித்தார் மமிதா. அதற்கடுத்து அவருக்குத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வந்தன.

தனுஷ் ஜோடியாக 'கர' படத்தில் நடித்தார். அந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்த 'ஜனநாயகன்' படம் எதிர்பார்த்த வசூலையும், வரவேற்பையும் பெறவில்லை.

இந்த வருடத்தில் அவரது மூன்றாவது வெளியீடாக நாளை மறுதினம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் வெளியாக உள்ளது. முந்தைய இரண்டு படங்களின் தோல்வி ராசி இந்தப் படத்திலும் தொடராது என திரையுலகில் நம்புகிறார்கள். படத்தின் டிரைலரைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கும் ஒரு நம்பிக்கை உள்ளது.

இந்தப் படத்தின் வெற்றிதான் மமிதாவின் அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகளை உறுதி செய்யும். இப்படத்திற்கு அடுத்து மமிதா நடித்து 'இரண்டு வானம்' படம் வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் நான்கு தமிழ்ப் படங்களுடன் மமிதா முன்னணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !