நரியாக இருப்பதை விட நாயாக இருக்கவே விரும்புகிறேன் ; கங்கனா ரணாவத்
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு குறித்த மாணவர் போராட்டம் சமீபத்தில் ஓய்ந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி தேர்வுகள் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வு குளறுபடிகளுக்கான போராட்டத்தின் போது திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்த நிலையில், இப்போது இந்தப் போராட்டத்திற்கு பெரிய அளவில் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.
பிரபல பாலிவுட் நடிகரான நஸ்ருதீன் ஷா மட்டும், வாயில் எலும்புத் துண்டு வைத்திருக்கும் நாய் குரைக்க முடியாது என்று இந்தப் போராட்டம் குறித்து வாய் திறக்காதவர்கள் பற்றி விமர்சித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் பியூஸ் மிஸ்ரா பேசும்போது, தற்போதைய சூழலில் அந்த எலும்பைக் கவ்விய நாய் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்தக் கேள்வியை மேற்கோள் காட்டிய நடிகை கங்கனா ரணாவத், நஸ்ருதீன் ஷாவை நரி என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், நஸ்ருதீன் ஷா போல நரியாக இருப்பதை விட நான் நாயாக இருப்பதையே விரும்புவேன். நாய்கள் விசுவாசத்திற்கும் அழகுக்கும் பெயர் பெற்றவை; நாயாக அழைக்கப்படுவதை நான் ஒரு பாராட்டாகவே கருதுவேன். நான் பிறந்த மண்ணுக்காகப் போராடுவதில் பெருமை கொள்கிறேன். ஆனால், நஸ்ருதீன் ஷா இந்த நாட்டின் உணவை உண்டு விட்டு அண்டை நாட்டுக்காகப் பேசுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார் கங்கனா ரணாவத்.