காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ்
காப்பிரைட் உத்தரவை மீறி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து பாடல்களை பயன்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக சரிகம தொடரப்பட்ட வழக்கில் டில்லி ஐகோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
காப்பிரைட் தொடர்பான பிரச்னையில் இளையராஜா, சரிகம நிறுவனம் இடையே டில்லி ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. 1976 முதல் 2001 வரை பல்வேறு காலக்கட்டங்களில் பல தயாரிப்பாளர்களிடம் இருந்து 134 படங்களின் பாடல்கள் உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது. இவற்றுக்கு இளையராஜா உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என டில்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதை நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடியானது.
இந்நிலையில் கோர்ட் உத்தரவை மீறி இளையராஜா பாடல்களின் உரிமையை கொண்டாடி வருவதாக சரிகம நிறுவனம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த மனுவில் அதற்கான ஆதாரங்களையும் சமர்பித்துள்ளது. மேலும் தடையை மீறும் இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அதில் கிடைக்கும் தொகையை தங்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் இளையராஜா பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.