உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி Vs சூரி : இப்போது 'ப்ரைட்' ஆகத் தெரிவது யார் ?

கார்த்தி Vs சூரி : இப்போது 'ப்ரைட்' ஆகத் தெரிவது யார் ?

சினிமாவில் யார் எப்போது உயரே செல்வார்கள், ஆச்சரியப்படும் வரவேற்பைப் பெறுவார்கள் என்பதைச் சொல்ல முடியாது. சிறிய வேடங்களில் நடித்த பலர் அவர்களது உழைப்பால் முன்னேறி கதாநாயகனாக வெற்றிகரமாக வலம் வந்த வரலாறு தமிழ் சினிமாவில் உண்டு.

இன்றைய தலைமுறை ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்த் தொடங்கி சூரி வரை சிலரை உதாரணமாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இரு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 10ம் தேதி, கார்த்தி நடித்த 'சர்தார் 2', சூரி நடித்த 'மண்டாடி' ஆகிய படங்கள் வெளிவந்தன. கார்த்தி யார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நடிகர் சிவகுமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி. வாரிசு நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சூரி, டிவிக்களில் தலை காட்டி, பின் சினிமா பக்கம் வந்து சிறு சிறு வேடங்களில் நடித்து, காமெடியனாக வளர்ந்து, இன்று நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

கார்த்தி படமும், சூரி படமும் ஒரே நாளில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படங்கள் வெளியான அன்றே கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் பழைய எக்ஸ் தள பதிவு ஒன்றும், சூரியின் நண்பர், நடிகர் சிவகார்த்திகேயனின் அன்றைய புதிய பதிவு ஒன்றும் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 'சர்தார் 2' படம் 'மண்டாடி' படத்திடம் சரணடைந்துவிட்டதாக கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ், தெலுங்கு இரண்டிலும் படத்திற்கான விமர்சனங்களும், வசூலும் பாசிட்டிவ்வாக இல்லை. அதேசமயம், 'மண்டாடி' படத்திற்கு தமிழ், தெலுங்கில் பாசிட்டிவ்வான விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்துள்ளது. முன்பதிவில் 'சர்தார் 2' படத்தை விடவும் 'மண்டாடி' படம் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னேறி வருகிறது.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் 'நான் மகான் அல்ல' படத்தின் ஒரு காட்சி அதிகம் பரவி பேசு பொருளாகி உள்ளது. கார்த்தியின் நண்பர்களாக அப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் சிறிய வேடங்களில் நடித்திருந்தனர். கார்த்தியின் தோழியான நீலிமா ராணியின் திருமணத்தின் போது குழு புகைப்படம் எடுக்கும் போது, கார்த்தி மறுபக்கத்தில் இருக்கும் சூரியை அழைத்து தன் பக்கம் வந்து நிற்கச் சொல்கிறார். “ஒரு போட்டோவைக் கூட என்னை விட்டு எடுக்க மாட்றியே மாப்ளே,” என்கிறார்.

அதற்கு கார்த்தி, “இல்லடா, நீ என் பக்கத்துல நின்னா நான் கொஞ்சம் ப்ரைட்டா தெரிவன்ல”, என பதிலளிக்கிறார். ஒரு 'பாடி ஷேமிங்' வசனம்தான் இது. 2010ல் இந்தப் படம் வெளியான கால கட்டங்களில் இப்படியான 'பாடி ஷேமிங்' வசனங்களுக்கு எதிர்ப்புகள் இல்லாமல் இருந்தது. இப்போதெல்லாம் இப்படி வசனம் எழுதவும் முடியாது.

அந்த திருமண வீடியோ காட்சியைப் பகிர்ந்து பலரும் சூரியின் வளர்ச்சியைப் பாராட்டி வருகிறார்கள். அன்றைக்கு சூரி 'ப்ரைட்' ஆக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று அப்படி ஒரு வசனம் பேசிய கார்த்தியுடன் போட்டி போட்டு இன்று, அவரை விடவும் 'ப்ரைட்' ஆக வரவேற்பையும், வெற்றியையும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

முருகன்
2026-09-12 12:19:48

அதை எழுதியது ஒரு இயக்குநர் இதில் கார்த்திக்கு என்ன சம்பந்தம் உள்ளது


PV
2026-09-12 12:05:41

Never Karthi was a low guy.