உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இசையமைப்பாளராக டி எம் சவுந்தரராஜன் முயற்சித்த “பலப்பரீட்சை”

பிளாஷ்பேக்: இசையமைப்பாளராக டி எம் சவுந்தரராஜன் முயற்சித்த “பலப்பரீட்சை”


ஏறத்தாழ ஆறு தசாப்தங்களாக தமிழ் திரையிசையின் தனித்துவமிக்க ஒரு ஆண் குரலாக, பல்வேறுபட்ட நாயகர்களுக்கு வெவ்வேறு விதமாகப் பல்லாயிரம் பாடல்களைப் பாடி, தமிழ் திரையிசை உலகின் ஒரு பண்பாட்டுச் சின்னமாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜன். “கிருஷ்ண விஜயம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையிசை உலகிற்கு விஜயம் செய்த இவர், பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களை, தமிழ் உட்பட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என் பல்வேறு மொழிகளில் பாடியிருக்கின்றார்.

சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தரான இவர் பாடி, இசையமைத்த பக்தி பாடல்கள் அடங்கிய ஆல்பங்களும் நிறைய உண்டு. 3000க்கும் அதிகமான திரைப்படங்களில் ஒரு பின்னணிப் பாடகராகவே பயணித்துப் பழக்கப்பட்டிருந்த இவரை ஒரு இசையமைப்பாளராக அடையாளப்படுத்திய திரைப்படம்தான் இந்த “பலப்பரீட்சை” என்ற திரைப்படம்.

ஒரு பின்னணிப் பாடகராக இவரது குரலினிமையை மட்டும் கேட்டுக் கிரங்கிப் போயிருந்த ரசிகர்கள், ஒரு இசையமைப்பாளராக டி எம் சவுந்தரராஜனின் பங்கு எத்தகையது எனக் காணும் ஆர்வத்தோடு திரையரங்கிற்குச் சென்று பார்த்த திரைப்படமாக அமைந்திருந்ததுதான் இந்த “பலப்பரீட்சை”. முத்துராமன், சுஜாதா, ஜெய்கணேஷ், சோ, ஏ சகுந்தலா, பிரேம் ஆனந்த், ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தை 'ஆனந்தி பிலிம்ஸ்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ், வி மோகன் தயாரிக்க, படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் முக்தா வி சீனிவாசன். கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுத, படத்திற்கு முதன் முதலாக இசை வடிவம் தந்திருந்தார் பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜன்.

எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தேவா, எஸ் ஏ ராஜ்குமார் என பல இசையமைப்பாளர்கள் பின்னணி பாடியிருப்பதைப் போல், பின்னணிப் பாடகர்களான ஏ எம் ராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம், கே ஜே ஏசுதாஸ், மலேசியா வாசுதேவன் போன்றோர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜனும் இசையமைப்பாளராக அவதாரம் கண்ட ஒற்றைத் திரைப்படம்தான் இந்த “பலப்பரீட்சை”. பின்னணிப் பாடகராக திரையிசையின் உச்சம் தொட்ட டி எம் சவுந்தரராஜன், ஒரு திரைப்படத்தின் இசையமைப்பாளராக ரசிகர்களின் கவனங்களை ஈர்க்கத் தவறியிருந்தார் என்பதைத்தான் காட்டியது இந்த “பலப்பரீட்சை”.

1977ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அன்று வசூல் ரீதியாக ஒரு வெற்றித் திரைப்படமாகவே அறியப்பட்டது. மேலும் அந்த ஆண்டின் மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசு சினிமா விருது கிடைக்கப் பெற்றதோடு, சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசினை நடிகர் முத்துராமனுக்கும், சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதினை படத்தின் வசனகர்த்தா தூயவனுக்கும் வழங்கி சிறப்பித்திருந்தது தமிழ்நாடு அரசு. பல்லாயிரக் கணக்கான திரையிசைப் பாடல்களை தனது கம்பீரக் குரலில் பாடி மகிழ்வித்தும், பலநூறு பக்திப் பாடல்கள் அடங்கிய ஆல்பங்களுக்கு இசையமைத்துப் பாடி நம்மை பரவசமடையச் செய்த இசைச்சித்தர் டி எம் சவுந்தரராஜன் சினிமாவிற்காக இசையமைத்த ஒரே திரைப்படம் என்ற அடையாளத்தோடு பார்க்கப்படும் இந்த “பலப்பரீட்சை” திரைப்படம் என்றும் ஒரு தனிச்சிறப்பு மிக்க திரைப்படம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !