ராமாயணா : வரி விலக்கு அளித்த மேற்கு வங்க முதல்வர்
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
நேற்று கோல்கட்டாவில் நடைபெற்ற தசரா விழாவில் முதல்வர் மற்றும் ராமாயணா நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி படத்திற்கான வரி விலக்கை அறிவித்தார். மேலும் பேசுகையில், ஸ்ரீகிருஷ்ணா, அர்ஜுனா, மகாபாரதா ஆகிய படங்களும் மக்கள் பார்க்கும் விதத்தில் எதிர்காலத்தில் வர வேண்டும் என்றார்.
தங்களது ராமாயணா படக்குழுவினரை கோல்கட்டாவில் நடக்கும் தசரா விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர். 20 வருடங்களுக்கு முன்பு நாடக நடிகராக இருந்த போது கோல்கட்டாவிற்கு வந்ததைப் பற்றி நினைவு கூர்ந்து பேசினார்.
மேற்கு வங்க முதல்வர் அறிவித்த வரி விலக்கின்படி மாநில ஜிஎஸ்டி வரி அப்படத்திற்கு வசூலிக்கப்பட மாட்டாது. அதன் மூலம் டிக்கெட் விலை கொஞ்சம் குறையும். இதனால், தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் அதிகமாவார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தைத் தொடர்ந்து வேறு சில மாநிலங்களும் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.