தமிழுக்கு வந்த பஞ்சாபி நடிகை
காஜல் அகர்வால், சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் வரிசையில் பஞ்சாபில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் ஷெர்ரி அகர்வால். பஞ்சாபி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர் சைக்கிள் கேப் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். ட்யூப்லைட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள இதில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ் ஜோடியாக ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.
தெலுங்கில் 'ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி', 'ராம் அசுர்', 'ஐ ஹேட் யூ' ஆகிய திரைப்படங்களிலும் 'ஆகர்ஷிதா' என்ற கன்னடப் படத்திலும், 'கௌஷிகி', 'ஐபிஎஸ் துபேக்' ஆகிய ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் அறிமுகமாவது குறித்து ஷெர்ரி அகர்வால் கூறும்போது, “ஒரு நடிகையாக, 'சைக்கிள் கேப்' திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்ததுடன் படக்குழுவினர் அனைவரும் இனிமையாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் மாறியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
இசை, காதல் மற்றும் 1990களின் காதலில் நிறைந்திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.