சல்மான்கானின் 'மாத்ரூபூமி' 4.5 நிமிட டிரைலர் நாளை வெளியாகிறதா?
நீண்ட நாட்களாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த சல்மான் கானின் 'மாத்ரூபூமி' படம், ஒருவழியாக விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது. தற்போது பாலிவுட்டில் வெளியாகியுள்ள தகவல்படி, இந்த போர்க்கள பின்னணியைக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் படத்தின் டிரைலர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தற்போது நிலவும் பண்டிகைக் கால உற்சாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மும்பையில் பிரமாண்டமான விழா ஒன்றை நடத்தத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 'பேட்டில் ஆப் கல்வான்' எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படம், இந்தியா-சீனா இடையிலான உறவு மேம்பட்டதை அடுத்து, படத்தின் உள்ளடக்கத்திற்கு அரசு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதால் பல முக்கிய மாற்றங்களுக்கு உள்ளானது.
தணிக்கைக் குழுவால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள இந்த டிரைலர், 4.5 நிமிடங்கள் நீளம் கொண்டதாகும். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிக நீண்ட டிரைலர்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு சற்றுக் குறைவாகவே உள்ள நிலையில், இந்த டிரைலர் அந்தச் சூழ்நிலையை மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படத்தில் சித்ராங்கதா சிங் கதையின் நாயகியாக நடித்துள்ளார். கர்னல் சந்தோஷின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், சல்மான்கான் இந்திய ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். அபூர்வா லக்கியா இயக்கத்தில் உருவாகியுள்ள மாத்ரூபூமி படத்தைச் சல்மான்கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.