சிரஞ்சீவியின் 'காக' பாடல் வெளியீட்டு விழா அமெரிக்காவில் நடக்கிறது! -தமன் வெளியிட்ட தகவல்!
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'காக' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்து, விளம்பரப் பணிகளைத் தொடங்குவதற்காகப் படக்குழுவினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.
காக படப்பிடிப்புத் தளத்தில் சிரஞ்சீவியுடன் எடுத்துக்கொண்ட கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள தமன், டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் பாடலொன்று அமெரிக்காவில் வெளியிடப்படும் என்றும், அந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிரஞ்சீவியின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது அமெரிக்கப் பயணம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பாபி கொல்லி இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் 2027ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் அனஸ்வரா ராஜன், நிவேதா பெத்துராஜ், கெட்டப் சீனு, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.