ரஜினி எடுத்த முடிவு சரியே : மோகன்பாபு ஆதரவு
சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் சொன்னபடி பார்த்தால் நேற்றைய தினம்(டிச-31) அவர் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.. ஆனால், அண்ணாத்த படப்பிடிபின்போது படக்குழுவினர் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று, அதனை தொடர்ந்து ரஜினிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு, அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை, மருத்துவர்களின் அறிவுரை என படு விரைவில் காட்சிகள் மாறின. இதனையடுத்து, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் கட்சி துவங்கப்போவதிலை என அரசியலில் இருந்து பின்வாங்கும் முடிவை அறிவித்தார் ரஜினிகாந்த்.
அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தந்தாலும், அவரது நலம் விரும்பிகளான திரையுலக நண்பர்களுக்கு அவரது இந்த முடிவு மகிழ்ச்சியையே தந்துள்ளது. குறிப்பாக ரஜினியின் நீண்டநாள் நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன்பாபு ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அரசியல் என்பது மோசமான விளையாட்டு.. அவரைப்போன்ற நல்ல மனிதர்கள் அரசியலில் நுழைவது நல்லதல்ல என பலமுறை நான் ரஜினியிடம் எனது அறிவுரையாகவே கூறியுள்ளேன். இப்போது நல்ல முடிவையே அவர் எடுத்துள்ளார். ரஜினி ரசிகர்கள் அவரது இந்த முடிவை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டும் உள்ளார் மோகன்பாபு.