100 சதவீத ரசிகர்களை வரவழைக்குமா 'மாஸ்டர், ஈஸ்வரன்' ?
தமிழ் சினிமா உலகினர் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன தினம் இன்று(ஜன., 4) வந்துவிட்டது. சினிமா தியேட்டர்களில் 100 சதவீத மக்களுக்கு அனுமதி என்ற உத்தரவை அரசு இன்று பிறப்பித்தது. ஒட்டு மொத்த திரையுலகினரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஓரிரு மாதங்களாகவே மக்கள் மத்தியில் கொரானோ பயம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. பேருந்துகள், கோயில்கள், கடைகள், கடற்கரை, சுற்றுலாத் தளங்கள், அரசியல் கூட்டங்கள், திருமண விழாக்கள், குடும்ப விழாக்கள் என அந்த இடங்களில் எல்லாம் மக்கள் அதிகமாகவே கூடி வருகிறார்கள். சில இடங்களில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவை புறக்கணிக்கப்பட்டும் வருகின்றன.
ஆனாலும், தியேட்டர்களுக்கு மட்டும் மக்கள் கடந்த ஐம்பது நாட்களாக கூட்டம் கூட்டமாக வரவேயில்லை. திறக்கப்பட்ட பல தியேட்டர்கள் மக்கள் வராத காரணத்தால் மீண்டும் மூடப்பட்டன. பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகாததும் அதற்கு மற்றொரு காரணம் என்றார்கள்.
விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' படம் வெளிவந்தால் அனைத்துமே தலைகீழாக மாறும், மக்கள் தியேட்டர்களை நோக்கி வருவார்கள் என திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்தார்கள். அதற்குத் தகுந்தபடி அப்படத்திற்காக சிலபல சலுகைகளையும் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கொடுத்துள்ளதாகவும் தகவல்.
'மாஸ்டர்' படத்துடன் சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படமும் பொங்கல் வெளியீடாக வர உள்ளது. இந்த இரண்டு படங்களும் 100 சதவீத ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்குமா என்பதற்கு நாம் இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். அந்த இரண்டு படங்களுக்கும் எதிர்பார்க்கும் கூட்டம் வந்துவிட்டால் தேங்கிப் போய் உள்ள பல படங்கள் தொடர்ச்சியாக வெளிவர வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமா உலகின் இந்த வருடத்திய எதிர்காலம் ரசிகர்களின் கையில் தான் உள்ளது. ஒன்பது மாதங்களாக பொறுத்திருந்த தியேட்டர்காரர்களுக்கும் திரையுலகினருக்கும் பொங்கல் தினத்தில் மகிழ்ச்சி பொங்கும் விதத்தில் மக்கள் 'கூட்டம்' கூடி பரிசளிப்பார்களா?.