அந்தாதூன் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் அந்தாதூன். தற்போது இந்தப்படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகிறது. இந்நிலையில் அந்தாதூன் படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்தததாக விஜய்சேதுபதியை வைத்து இந்தியில் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஏற்கனவே பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் 'எக்கிஸ்' என்கிற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதாலும், இந்த கொரோனா காலகட்டத்தில் அந்தப்படத்தை எடுப்பதில் நிறைய சிரமங்கள் இருப்பதாலும் அந்தப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். இந்தநிலையில் தான் விஜய்சேதுபதியை வைத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் ஒன்றை இயக்கம் வேலையை துவங்கிவிட்டாராம் ஸ்ரீராம் ராகவன். விஜய்சேதுபதியும் இதற்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.
சமீபத்தில் தான் விஜய்சேதுபதி முதன்முதலாக இந்தியில் நடிக்கும் 'மும்பைகார்' என்கிற படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது விஜய்சேதுபதி குறித்த ஆச்சர்யத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.