'ஈஸ்வரன்' வெளிநாடுகளில் ஓடிடி அறிவிப்பு, தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு
ADDED : 1779 days ago
சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடிக்க ஜனவரி 14 பொங்கல் அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் 'ஈஸ்வரன்'.
இன்று மாலையில் இப்படத்தின் வெளிநாடு ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதாவது, தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும் ஜனவரி 14ம் தேதியன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியீடு என்பது தியேட்டர்காரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஓடிடியில் ஒரு படம் வெளியாவதற்கு சில மணி நேரம் முன்பே மிகத் தெளிவான பைரசி பிரின்ட்டுகள் வெளியாகிவிடுகின்றன. இதனால், தியேட்டர்களில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவது கேள்விக்குறியாகிவிடும்.
இப்படியான ஒரு புதிய முறைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், படத்தைத் திரையிட ஒப்பந்தம் போட்டுள்ள தியேட்டர்காரர்கள் படத் தயாரிப்பாளரிடம் படத்தைத் திரையிட விருப்பமில்லை என சொல்லிவிடுங்கள், அதனால் வரும் பிரச்சினைகளை சங்கம் பார்த்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், 'ஈஸ்வரன்' பட வெளியீட்டிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.