தென்னிந்தியாவில் திரைப்பட வெளியீடுகள், தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொரு வருடமும் அந்த நாட்களில் தங்களது படங்கள் வெளியாக வேண்டும் என பலரும் விரும்புவார்கள்.
கொரானோ தொற்று பரவல் காரணமாக கடந்த பத்து மாதங்களாக திரைப்பட வெளியீடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தென்னிந்தியா முழுவதும் இந்த வருட பொங்கல் பண்டிகை கொரானோவுக்குப் பின் ஒரு புத்துணர்வைக் கொடுத்துவிட்டது.
பொங்கலை முன்னிட்டு தமிழில் 'மாஸ்டர், ஈஸ்வரன்' ஆகிய படங்கள் தியேட்டர்களிலும், 'பூமி' படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. தெலுங்கில் 'கிராக், மாஸ்டர், ரெட், அல்லுடு அதுர்ஸ், சைக்கிள்' ஆகிய படங்கள் வெளியாகின.
தெலுங்கில் 'கிராக்' ஜனவரி 9ம் தேதியும், 'மாஸ்டர்' ஜனவரி 13ம் தேதியும், 'ரெட், அல்லுடு அதுர்ஸ்,' ஆகிய படங்கள் ஜனவரி 14ம் தேதியும், 'சைக்கிள்' ஜனவரி 15ம் தேதியும் வெளியாகின.
இந்தப் படங்களின் முதல் நாள் வசூலைப் பொறுத்தவரையில் 'மாஸ்டர்' படம் 5 கோடியே 70 லட்சம் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 'கிராக்' படம் 6 கோடியே 30 லட்சம் பெற்று முதலிடத்தையும், 'ரெட்' படம் 5 கோடியே 10 லட்சம் பெற்று மூன்றாவது இடத்தையும், 'அல்லுடு அதுர்ஸ்' 2 கோடி பெற்று நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற படங்கள் நேரடி தெலுங்குப் படங்கள், அவற்றுடன் டப்பிங் படமான 'மாஸ்டர்' போட்டி போட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது ஆச்சரியம்தான். படத்தின் நீளத்தைக் குறைத்து இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைச் சேர்த்திருந்தால் இரண்டாவது இடம் பிடித்ததற்குப் பதிலாக முதலிடத்தையே பிடித்திருக்கலாம் என்கிறார்கள்.