எல்லையை விஸ்தரிக்கும் விஜய் சேதுபதி
ADDED : 1765 days ago
தமிழ் சினிமாவில் நிறைய கமர்ஷியல் நடிகர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அவர்களது படங்களாலும், கதாபாத்திரங்களாலும் நீண்ட காலம் பேசப்படுவார்கள். அப்படி ஒரு பேசப்படும் நடிகராக கடந்த பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியவர் 2010ல் வெளிவந்த 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நாயகனாக அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் அவர் நடித்த படங்களும், கதாபாத்திரங்களும் சினிமாத் துறையிலும், விமர்சகர்களிடத்திலும், ரசிர்களிடத்திலும் பேசப்பட்டதாக அமைந்தது.
நேற்று அவர் நடிக்கும் தெலுங்குப் படமான 'உப்பெனா' பட போஸ்டரும், ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள மௌனப் படமான 'காந்தி டாக்ஸ்' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் தமிழ் மட்டுமல்ல வேற்று மொழிப் படங்களும் உண்டு. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கூட நடித்து வருகிறார். சினிமாவில் தனது எல்லையை மொழிகளைக் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரித்து வருகிறார். தமிழில் பேசப்பட்டது போலவே மற்ற மொழிகளிலும் அவர் பேசப்படுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.