மாஸ்டர் குறித்த விமர்சனம்- லோகேஷ் கனகராஜ் பதில்!
ADDED : 1721 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-விஜய சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தபோதும் வசூல் வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. உள்நாடு-வெளிநாடு என திரையிட்ட மூன்றாவது நாளிலேயே ரூ. 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது.
லாக்டவுனுக்கு பிறகு வெளியான முதல் பிரபல ஹீரோவின் படம் என்பதால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு தொடந்து படையெடுத்துக்கொண்டிருப்பதால் விஜய் படங்களில் முந்தைய சாதனைகளை இந்த மாஸ்டர் முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்த கலவையான விமர்சனஙக்ள் எழுந்திருப்பது குறித்து டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஒரு பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், மாஸ்டர் படம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்கள் வருகிறது. விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். விமர்சனம் என்பது பாசிட்டீவ்-நெகடீவ் என இரண்டு விதமாகவும் இருக்கும். அது எதுவாக இருந்தாலும் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அடுத்த படத்தில் விமர்சனங்கள் வராத அளவுக்கு கவனமாக செயல்படுவேன்.
அதோடு, விஜய்-விஜயசேதுபதி என இரண்டு ஹீரோக்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் படத்தின் நீளத்தை குறைக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.