சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய்
தமிழ் சினிமா உலகில் வசூல் நாயகன் எனப் பெயர் பெற்றவர் ரஜினிகாந்த். அவருக்கு அடுத்து தற்போது விஜய் தான் அந்தப் பெயரை தட்டிப் பறிப்பார் போலிருக்கிறது.
விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த மாஸ்டர் படம் 50 சதவீத இருக்கைகளிலேயே 200 கோடியைத் தொட உள்ளதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது 200 கோடியைத் தொட்டுவிட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் “#MasterEnters200CrClub” என டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த படங்களில் “மெர்சல், சர்க்கார், பிகில்” ஆகிய படங்கள் 200 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. தற்போது நான்காவது படமாக மாஸ்டர் படம் அமைந்துள்ளது. விஜய் நடித்து அடுத்தடுத்து வெளியான நான்கு படங்களும் இப்படி ஒரு சாதனையைப் புரிந்திருப்பது அவருடைய வசூல் இமேஜை அதிகப்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த எந்திரன், கபாலி, 2.0, பேட்ட ஆகிய நான்கு படங்கள் 200 கோடி வசூலைப் பெற்றுள்ளன. அவற்றில், எந்திரன், 2.0 ஆகிய படங்களின் பட்ஜெட் மிக அதிகம். ஆனால், விஜய் படங்களின் பட்ஜெட் ரஜினி படங்களின் பட்ஜெட்டை விடவும் குறைவு. மேலும், 2.0, தர்பார் ஆகிய படங்கள் எதிர்பார்த்த லாபத்தைத் தரவில்லை. எனவே, சினிமா வியாபாரத்தில் ரஜினி இடத்தை விஜய் கடந்துவிட்டார் என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.