விஜய், அல்லு அர்ஜுன் ஒன்றாக நடனம் : அஷ்வினின் ஆசை
தென்னிந்தியத் திரையுலகத்தில் உள்ள நடிகர்களில் தங்களது நடனத் திறமையால் பலரையும் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் தமிழ் நடிகர் விஜய், மற்றொருவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். இவர்கள் இருவருமே சிறப்பாக நடனமாடுபவர்கள். அவர்களது நடனத்திற்கே பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் இருவரையும் ஒன்றாக நடனமாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஷ்வினுக்கு வந்துள்ளது. விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை இப்போதுதான் அஷ்வின் பார்த்திருப்பார் போலிருக்கிறது. அவரது இன்ஸ்டா பக்கத்தில் அந்தப் படம் பற்றியே அதிகம் பதிவிட்டிருக்கிறார்.
“எல்லாரும் மாஸ்டர் பார்த்துட்டீங்களா, எப்படி இருக்கு, 'வாத்தி ரெய்டு', உடனடியாக எனது காலர் டியூன், அனிருத், வேற மாறி..., வாத்தி கம்மிங், அதுக்கும் மேல அனிருத், விஜய், அல்லு அர்ஜுன் இருவரையும் ஒன்றாக நடனமாட வைத்தால் அது ஒரு பென்ச் மார்க்” என அடுத்தடுத்து மாஸ்டர் பற்றியே தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
அஷ்வின் ஒரு தீவிர சினிமா ரசிகர். பல படங்களின் வசனங்களை அப்படியே மனப்பாடமாகச் சொல்லுவார். அவரது கிரிக்கெட் பற்றிய யு டியுப் நிகழ்ச்சிகளில் கூட சினிமா ரெபரென்ஸ் கண்டிப்பாக இருக்கும்.