படம் : ஆட்டோகிராப்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா
இயக்கம் : சேரன்
தயாரிப்பு : சேரன்
பிரேமம், 96 படங்களுக்கு எல்லாம் முன்னோடி, ஆட்டோகிராப்! ஒருவனுக்கு பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில் தோன்றும் காதல்களும், அதை இழந்த வலியையும், அதற்கு நட்பு கொடுத்த ஆறுதலும் தான், இப்படத்தின் கதைக்களம்.
ஒவ்வொரு பருவ காதலையும், ரவி வர்மன், விஜய் மில்டன், துவாரகாந்த், ஷாங்கி மகேந்திரன் என, தனித்தனி ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்தனர். அது, பார்வையாளர்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதோ ஒரு காட்சி நம்மை, கடந்த காலத்திற்கு இழுத்துச் செல்லும், மேஜிக் இப்படத்தில் இருந்தது. அதனால் படம், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும், படம் பாராட்டப்பட்டது.
இப்படத்தில் நடிப்பதற்காக விஜய், பிரபுதேவா, விக்ரம் என, பல்வேறு நடிகர்கள் அணுகப்பட்டனர். பல்வேறு காரணங்களால், அவர்கள் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதையடுத்து நடிகராக களமிறங்கினார், இயக்குனர் சேரன். நடிகராக அவரின் இரண்டாவது படம் இது.
படத்தின் பின்னணி இசையை, சபேஷ் - -முரளி மேற்கொண்டனர். சேரன், நடிப்பிலும் சோடை போகவில்லை. கேரள மண்ணில், கோபிகா உடனான காதலில், அவ்வளவு ஈர்ப்பு இருந்தது. ஆணும், பெண்ணும் நட்பாக பழக முடியும் என்பதை, சினேகாவின் கதாபாத்திரம் மூலம் அறிவுறுத்தினார் சேரன்.
பரத்வாஜ் இசையில், ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மீசை வச்ச பேராண்டி, நினைவுகள் நெஞ்சினில், ஒவ்வொரு பூக்களுமே... பாடல்கள் தமிழர்களை தாலாட்டின.
ஒவ்வொரு பூக்களுமே... பாடலுக்காக, பின்னணி பாடகி சித்ரா, பாடலாசிரியர் பா.விஜய் ஆகியோர், தேசிய விருது பெற்றனர். மேலும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. பிலிம்பேர் மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் இப்படம் அள்ளியது. இப்படம் பல்வேறு மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது.
அனைவரது மனதிலும், ஆட்டோகிராப் உள்ளது!