இன்று முதல் நடிகர் - செல்வராகவன்
ADDED : 1686 days ago
தமிழ் சினிமாவில் இன்றைய இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் செல்வராகவன். 2003ம் ஆண்டு வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதற்கு முன்பாக அவருடைய அப்பா கஸ்தூரிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். தனுஷ் நாயகனாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதினார்.
தம்பி தனுஷை தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக மாற்றியதில் அண்ணன் செல்வராகவனுக்குத்தான் முக்கிய பங்குண்டு. அடுத்தடுத்து விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட சில படங்களைக் கொடுத்தவர் செல்வராகவன்.
தற்போது 'சாணி காயிதம்' படத்தின் மூலம் நடிகராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்வது குறித்து செல்வராகவன் டுவீட் செய்திருக்கிறார்.
“23 வருடங்களாக திரைப்பட உருவாக்கத்தில்....இன்று முதல் ஒரு நடிகராகவும்...என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன், அவர்கள்தான் என்னை உருவாக்கியவர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணி காயிதம்' படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.