பல்லாவரம் மலை : சமந்தாவின் நெகிழ்ச்சிப் பதிவு
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் நடிகை சமந்தா. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அதற்காக ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ளார் சமந்தா.
சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் சமந்தா. கல்லூரிப் படிப்பை முடித்த பின் மாடலிங்கில் நுழைந்து பிறகு நடிகையானவர். நேற்று சென்னைக்கு வந்த போது பல்லாவரம் மலையை வீடியோ எடுத்து அந்த மலையுடனான தனது நினைவகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “இந்த மலை, நான் வளரும் போது எனது மொட்டை மாடியில் இருந்து தெரியும். எனக்கு பிடித்த இடம். மற்ற மனிதர்களை விட என்னைப் பற்றி அதிகம் அறிந்திருக்கும். பரீட்சை நாட்களில் அதிகாலையில் ஆர்வமாய், அனைத்து கடவுள்களுக்கும் நான் கொடுத்த வாக்குறுதிகள், எதையும் காப்பாற்றியதேயில்லை. என் முதல் காதல், இதயம் உடைந்தது, நண்பரின் மரணம், கண்ணீர்கள், பிரியாவிடை... அதனால் தான் அது 'என்னுடைய மலைக்கு தனி பதிவுக்குத் தகுதியானது,” என தன்னுடைய பள்ளி, கல்லூரிப் பருவ நாட்களை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.
தன்னை எப்போதுமே சென்னைப் பெண் சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர் சமந்தா. இப்போது காதல் கணவர் நடிகர் நாகசைதன்யாவுடன் ஐதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார்.