'மாஸ்டர்' வசனம் - 'ஜியாகிரபி' தெரியாதவர்கள் : இயக்குனர் அகத்தியன் கிண்டல்
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'மாஸ்டர்'. அப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை குடிகாரராகவும், இஷ்டத்துக்கு பொய் சொல்பவராகவும் ஆரம்பத்தில் அமைத்திருப்பார்கள்.
அப்படியான சில காட்சிகளில் அஜித் நடித்த 'காதல் கோட்டை' படத்தில் அஜித்திற்காக தேவயானி பரிசளிக்கும் ஸ்வெட்டரைப் பற்றிக் கிண்டலடித்து வசனம் பேசி ஒரு காட்சி வைத்திருந்தார்கள்.விஜய் சொல்லும் கதையைக் கேட்டு, “ராஜஸ்தான்ல அடிக்கிற குளிருக்கு எதுக்கு ஸ்வெட்டரு” என 'மாஸ்டர்' படத்தில் நாயகி மாளவிகா பேசுவார்.
ராஜஸ்தான் என்றாலே அங்கு வெயில் அதிகமாக இருக்கும். அங்கிருப்பவருக்கு எதற்கு ஸ்வெட்டர் என்றுதான் 'மாஸ்டர்' காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் 'காதல் கோட்டை' படத்தை இயக்கிய அகத்தியன் அந்த கிண்டல் வசனம் குறித்து பதிலடியாகக் கிண்டலடித்துள்ளார்.
“ராஜஸ்தான்ல எப்படி குளிர் இருக்கும்னு அங்க போய் பார்த்தால்தான் தெரியும். ஜியாகிரபியைப் பொறுத்த அளவுல அது தப்பில்ல, மிகச் சரியான விஷயம். அதை தப்புன்னு யோசிக்கிறாங்கன்னா அவங்களுக்கு ஜியாகிரபி தெரியலன்னு அர்த்தம்” எனக் கூறியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜியாகிரபி தெரியாமல் 'மாஸ்டர்' படத்தில் அப்படி ஒரு வசனத்தை வைத்தது அஜித் படத்தை வேண்டுமென்றே கிண்டலடிக்கத்தான் என்பது இப்போது புரிகறது என பல ரசிகர்கள் அதற்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.