'மாஸ்டர்' ராசி 'கர்ணன்' படத்திற்கும் கிடைக்குமா ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படம் இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளிவந்தது. ஆனால், இந்தப் படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டியது. அப்போது கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்ட போதும் படத்தை வெளியிடாமல் இந்த ஆண்டு ஜனவரியில் தான் வெளியிட்டார்கள்.
50 சதவீத இருக்கை அனுமதியில் வெளியான 'மாஸ்டர்' படம் பெரிய வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து, பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் படமாக அமைந்தது. ஏப்ரல் 9ம் தேதி என்பது 'மாஸ்டர்' படத்திற்கும் 'கர்ணன்' படத்திற்குமான ஒரு ஒற்றுமை என்று கூறலாம். நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'கர்ணன்' படம் நாளை தவிர்த்து அதற்கு மறுநாளிலிருந்து 50 சதவீத இருக்கைகளுடன் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
50 சதவீத இருக்கைகளில் வசூலைக் குவித்த 'மாஸ்டர்' பட ராசி 'கர்ணன்' படத்திற்கும் கிடைக்குமா என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனிடையே கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் தாணு டுவிட்டரில், ‛‛சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும். அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்'' என பதிவிட்டுள்ளார்.