3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியான பார்டர் பர்ஸ்ட் லுக்
ADDED : 1635 days ago
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில், விஜய ராகவேந்திரா தயாரிக்க, அருண்விஜய், ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெபி பட்டேல் நடித்துள்ள படம் பார்டர். தமிழகம் முழுவதும் 11:11 புரொடக்சன் சார்பில் டாக்டர்.பிரபுதிலக் இப்படத்தை வெளியிடுகிறார். அறிவழகன் இயக்க, சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னை தி பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.
விழாவின் தொடக்கமாக இந்த ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான பார்டர் வெளியிடப்பட்டது. தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.
தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான பிரபுதிலக் பேசியதாவது: கோடையில் மழை எவ்வளவு அபூர்வமோ, அந்த அளவிற்கு இப்படமும் அபூர்வமான படம். இந்த கொரோனா காலகட்டத்தில் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் காலில் விழுந்து நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‛அடுத்த சாட்டை, வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களைத் தொடர்ந்து இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறேன். அருண் விஜய்க்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லையோ என்ற ஆதங்கம் என்னுள் உண்டு. அந்த அடையாளத்தை இந்த ‛பார்டர் படம் பெற்றுத் தரும். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் என் தாயாரின் ஆசீர்வாதமும், வழிகாட்டலும் இருக்கிறது. அவர்கள் என்னை இயக்கும் மாபெரும் சக்தி. படத்தை மே மாதம் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் அருண் விஜய் பேசியதாவது: என் கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில், அறிவழகனும் ஒருவர். ஒரு நடிகருக்கு
பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் எனக்கு பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் கடினமாக உழைத்ததை பார்த்துள்ளேன். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு ‛பார்டர் படம் நகர்த்தியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.