குக் வித் கோமாளி 2 நிறைவு - கனி வெற்றியாளர்
ADDED : 1635 days ago
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குத் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு சுவாரஸ்யமாக, அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமா என ஆச்சர்யப்படுத்தினர். அதுமட்டுல்ல இந்த நிகழ்ச்சி தற்போது பிற மொழிகளில் ரீ-மேக் ஆகிறது.
இந்நிலையில் நேற்றுடன்(ஏப்., 14) இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கனி, பாபா மாஸ்டர், அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக பங்கேற்றனர். இவர்களுக்கு துணையாக வழக்கம் போல் சிவாங்கி, பாலா, புகழ், சரத், மணிமேகலை, உள்ளிட்ட கோமாளிகள் துணை நின்றனர். நேற்றைய நிகழ்ச்சி பைனல் என்பதால் இந்த போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்கள், கோமாளிகள் பங்கேற்றதோடு சில சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.
99 சாங்கஸ் ஹீரோ, இயக்குனர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இசையமைப்பாளர் ரஹ்மானும் பங்கேற்றார். இவர்களை தொடர்ந்து என்ஜாய் என்சாமி பாடல் புகழ் தீ, அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் பங்கேற்றனர். இவர்கள் தவிர்த்து பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகேன் ராவ் பங்கேற்றார். இறுதியாக நடிகர் சிம்புவும் பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். 6 மணிநேரம் நடந்த இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் சென்றது.
போட்டியின் முடிவில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 5 லட்சம் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. நடிகை ஷகிலா இரண்டாவது இடமும், அஸ்வின் மூன்றாவது இடமும் பிடித்தனர். இதுதவிர ஒவ்வொரு போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்ஷன், நடுவர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றதால் பலரும் உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினர். குறிப்பாக செப் தாமு அழுதது நிஜமாகவே அந்த நிகழ்ச்சியில் அவர் எந்தளவுக்கு ஒன்றிப்போய் இருந்தார் என்பதை பார்க்க முடிந்தது.
அடுத்து குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் இப்போதே கேட்க துவங்கிவிட்டனர்.