உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொடுமைப்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ., : குடும்பம் நடத்திய நடிகை ராதா புகார்

கொடுமைப்படுத்தும் போலீஸ் எஸ்.ஐ., : குடும்பம் நடத்திய நடிகை ராதா புகார்

சென்னை: தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து, குடும்பம் நடத்திய போலீஸ் எஸ்.ஐ., அடித்து துன்புறுத்துகிறார் என, போலீசில் நடிகை ராதா புகார் அளித்துள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதா (39). இவர், சென்னை சாலிகிராமத்தில் மகன் மற்றும்தாயுடன் வசித்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். அதன்பின், தொழில் அதிபர் மற்றும் அ.தி.மு.க., பிரமுகர் மீது பாலியல் உறவு குறித்து, போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், எண்ணுார் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணிபுரியும் வசந்தராஜா(44) மீது, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், ராதா புகார் அளித்தார். புகாரில், அவர் கூறியிருப்பதாவது: திருவான்மியூர் காவல் நிலையத்தில், வசந்தராஜா பணிபுரிந்த போது, அவருடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் காதலித்தோம். தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள போதிலும், எனக்கு தாலி கட்டி, இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

என்னுடன் குடும்பம் நடத்துவதற்காகவே வசந்தராஜா, வடபழனி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் கோரி வந்தார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். என் கணவர் என்பதால், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில், வசந்தராஜாவின் பெயரை சேர்த்தேன். சினிமா தொடர்பாக சந்திக்க வரும் நபர்களுடன், என்னை இணைத்து பேசினார். இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகார் மீது, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !