தெலங்கானாவில் இன்று(ஏப்., 21) முதல் தியேட்டர்கள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக சினிமா தியேட்டர்களுக்கும், சினிமா படப்பிடிப்புகளுக்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தெலங்கானா மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களை இரவு 8 மணிக்கு முன்னதாகவே மூட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தியேட்டர்களை நடத்த முடியாதென தெலங்கானா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தியேட்டர்களை இன்று(ஏப்., 21) முதல் மூடுகின்றனர். வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகளை 50 பேருக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டே நடத்த வேண்டும் என தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சர்க்காரு வாரி பாட்டா, ஆச்சார்யா உள்ளிட்ட சில பெரிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மே மாதம் வரையிலும் தெலுங்கில் புதிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீடுகள் கூட தள்ளிப் போகும் என்கிறார்கள்.