மே 1ல் ‛வலிமை அப்டேட் இல்லை : ஏமாற்றம் என்றாலும் ரசிகர்கள் வரவேற்பு
ADDED : 1623 days ago
மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியிடப்படுவதாக இருந்த ‛வலிமை பட அப்டேட்டை கொரோனா பிரச்னையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமாகி உள்ளனர். அதேசமயம் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
‛நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து அஜித் - வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛வலிமை. நாயகியாக ஹூயுமா குரேஷி நடிக்கிறார். அதிரடியான போலீஸ் தொடர்பான கதையில் இப்படம் தயாராகிறது. யுவன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஒரே ஒரு சண்டைக்காட்சியை மட்டும் ஸ்பெயினில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பிரச்னையால் இப்போது அதிலும் சிக்கல் நிலவுகிறது.
இதனிடையே இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி அனைவரும் அறிந்ததே. பிரதமர் வருகையின் போது, முதல்வர் பிரச்சாரம் சமயங்களில், கிரிக்கெட் போட்டி மைதானம் என ரசிகர்கள் எல்லை மீறினர். இதனால் அப்செட்டான அஜித் அறிக்கை விடும் நிலைக்கு சென்றது. இந்நிலையில் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படம் தொடர்பான அப்டேட் தொடர்ந்து வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்து இருந்தார். இதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதோடு அவர் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரமே மட்டுமே உள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் அன்றைய தினம் பட அப்டேட் வெளியாகாது என ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார் போனி கபூர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அறிக்கை : ‛‛எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் மே 1ல் அஜித்தின் 50வது பிறந்தநாளில் வலிமை பட பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும் போது கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றொர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலுமம், அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின் படி ‛வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போனி கபூரின் இந்த முடிவு அஜித் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்தாலும், பலர் இதை வரவேற்றுள்ளனர். நாடே கொரோனா பிரச்னையால் தவித்து வரும் வேளையில் வலிமை பட அப்டேட் வெளியானால் அது சரியாக இருக்காது. அஜித்தின் ரியல் ஹீரோயிசம் புரிகிறது, போனி கபூர் நல்ல முடிவை எடுத்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.