'அசுரன்' தெலுங்கு ரீமேக் 'நரப்பா' வெளியீடு தள்ளி வைப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சுவாரியர் நடித்து வெளிவந்த 'அசுரன்' படத்தை தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடிக்க 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை மே 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், “'நரப்பா' படத்தை நிறைய ஈடுபாட்டுடனும், கடின உழைப்புடனும் உருவாக்கினோம். படம் மீதான உங்களது அன்பு அதிகமாகவே இருக்கிறது.
உலக அளவில் இதுவரை பார்த்திராக அளவில் தொற்று பரவலால், இப்போது நாம் அனைவருமே ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதால், ரசிகர்களின் உடல்நலத்தையும், பாதுகாப்பையும் கருதி படத்தின் தியேட்டர் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம்.
சரியான நேரம் வரும் போது 'நரப்பா' படத்தைக் கொண்டு வருகிறோம். அது வரையில் நீங்கள் பாதுகாப்பாகவும், கவனமாகவும், வலிமையாகவும் இருங்கள். இதை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்போம், தயவு செய்து மாஸ்க் அணியுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்கள்.