உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு : கொரோனாவாலும் பாதிப்பு - திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவு : கொரோனாவாலும் பாதிப்பு - திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பு காரணமாக இன்று(ஏப்., 30) அதிகாலை உயிரிழந்தார். முன்னதாக அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று உறுதியானது. இதனால் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, ஒளிப்பதிவாளராக மாறி, பின் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கொரோனா உள்ளிட்ட வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் கே.வி.ஆனந்துக்கு நேற்று நள்ளிரவில் திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரே காரை எடுத்துக் கொண்டு தனியார் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆனால், அவரது உயிரை காப்பாற்றமுடியவில்லை. இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த்திற்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

தேவர் மகன் படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி, கமல் உள்ளிட்ட படக்குழுவுடன் கே.வி.ஆனந்த் (இடது ஓரம் இரண்டாவது நபர்)


சினிமாவில் கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை
1966ம் ஆண்டு அக்., 30ம் தேதி சென்னையில் பிறந்தவர் கே.வி.ஆனந்த். பத்திரிகை துறையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின் சினிமாவிற்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து அவருடன் கோபுர வாசலிலே, அமரன், தேவர் மகன், திருடா திருடா உள்ளிட்ட பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

மலையாளத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்கிய தென்மாவத்து கொம்பத்து என்ற படத்திற்காக பி.சி.ஸ்ரீராமை அணுகினார். ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாக அவரால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதையடுத்து அவரின் சிபாரிசின் பேரில் கே.வி.ஆனந்த் அந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல் படத்திற்கே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார். தமிழில் ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றிய முதல்படம் காதல் தேசம். அதன்பின் நேருக்கு நேர், முதல்வன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

அயன் படப்பிடிப்பு தளத்தில் கே.வி.ஆனந்த். இடது ஓரம் நடிகர் சூர்யா.


அதையடுத்து 2005ல் ஸ்ரீகாந்த் நடித்த ‛கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‛அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் படங்களை இயக்கி உள்ளார். இவற்றில் சூர்யாவை வைத்து மட்டும் 3 படங்களை இயக்கி உள்ளார்.

உடல் தகனம்
கே.வி.ஆனந்த்திற்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை. மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பான வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. வீட்டிற்கு வெளியே அவரது உடலை அவரது குடும்பத்தினருக்கு காண்பித்தனர். பின் நேராக சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

மின் மயானத்தில் வைக்கப்பட்டிருந்த கே.வி.ஆனந்தின் உடல்


கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் காலமானார். அந்த சோகத்தில் இருந்தே திரையுலகம் மீளாத நிலையில் அடுத்து கே.வி.ஆனந்தை இழந்திருக்கிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர்கள் ரஜனிகாந்த், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !