திருமணம் என்ற தவறை செய்ய மாட்டேன் - சார்மி
சிலம்பரன் கதாநாயகனாக முதலில் நடித்த 'காதல் அழிவதில்லை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. அடுத்து 'காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
தெலுங்கில் 2015ல் வெளிவந்த 'ஜோதி லட்சுமி' படத்திற்குப் பிறகு நடிப்பதையும் நிறுத்திவிட்டார். தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய் தேவரகொன்டா நடிக்கும் 'லிகர்' படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற செய்தி தெலுங்கு மீடியாக்களில் பரவியது. அதற்கு சார்மி அளித்துள்ள பதிலில், “எனது வேலையில் தற்போது சிறந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவ எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றிற்கு குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே தனது பல பேட்டிகளில் தான் எப்போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியவர், தற்போது அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.