சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. ஏற்கனவே கொரோனா பிரச்னை மற்றும் ரஜினியின் உடல்நிலை பாதிப்பால் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இந்த முறை எப்படியாது தீபாவளிக்கு படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன், கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சிறப்பு விமானத்தில் ரஜினி ஐதராபாத் அழைத்து செல்லப்பட்டு படப்பிடிப்பில் பங்கேற்றார். இந்நிலையில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் முடித்துவிட்டார். இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி. போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த ரஜினியை அவரது மனைவி லதா ஆராத்தி எடுத்து வரவேற்றார். இதுதொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
ஓரிரு நாளில் அண்ணாத்த மொத்த படப்பிடிப்பும் முடியும் என தெரிகிறது. அடுத்தப்படியாக அண்ணாத்த படத்தின் டப்பிங்கை முடித்து கொடுக்க எண்ணியுள்ள ரஜினிகாந்த், அதன்பின் வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மற்ற படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நிறுத்தப்பட்டாலும் சிறப்பு அனுமதி பெற்று அங்கு அண்ணாத்த படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். தற்போது ஐதராபாத்திலிருந்து சென்னைக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் சிறப்பு அனுமதி பெற்று ரஜினிகாந்த் வந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். அவர் விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூற உள்ளார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.