புற்றுநோயால் அவதிப்படும் நடிகை சரண்யா சசிக்கு கொரோனா
மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்தவர், சரண்யா சசி. தமிழில், பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தார். மலையாளத்திலும், தமிழிலும் ஏராளமான டி.வி. தொடர்களில் நடித்துள்ள சரண்யா சசி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவதிப்பட்டார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
பின்னர் அது புற்றுநோய் கட்டி என்று கண்டறியப்பட்டது. இதனால் பல்வேறு காலகட்டங்களில் அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்படி இருந்தும் புற்று நோய் முதுகெலும்புக்கு பரவி அங்கும் அறுவை செய்யப்பட்டது.
தற்போது அவர் நடிக்காவிட்டாலும் அவருக்கு மலையாள திரைக் கலைஞர்கள் பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள். சற்று தேறி வந்த சரண்யாவுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திடீர் காய்ச்சல் காரணமாக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இது தெரியவந்துள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.