40 நடிகர், நடிகைகளை சமாளிப்பது சவால்: ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி
ADDED : 1573 days ago
கவுதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்து முடிந்துள்ளது. சித்து குமார் இசையமைக்கிறார். ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகி.
இவர்கள் தவிர சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோமல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மவுனிகா, சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு நடச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மிக மிக அவசரம், மாயாண்டி குடும்பத்தார் படங்களின் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். திண்டுக்கல் அவரது சொந்த ஊர் என்பதால் படம் பற்றிய அவரின் அனுபவங்கள் குறித்து கூறியதாவது: நான் வளர்ந்த இடத்தில், நான் புழங்கிய தெருக்களில் படப்பிடிப்பு நடத்தியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இதற்கு முன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கு படமாக்கினோம். ஆனால் இப்போது முழுப்படமும் இங்கே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி பல வருடங்களாக எனது நெருங்கிய நண்பர். இந்தக் கதை குறித்து பல முறை என்னிடம் விவாதித்துள்ளார். மிக அழகான குடும்பக் கதை. படமாக்கும்போதே கண்களில் கண்ணீர் தேங்கும், பல ஆழமான, நெகிழ்வான தருணங்கள் படத்தில் இருந்தது. கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும்.
40 க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளுடன் 50 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க, படக்குழுவுடன் இணைந்து திட்டமிட்டோம். 40 நடிகர், நடிகைகளுடன் பணியாற்றியது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதற்கு முன் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்கள் செய்த அனுபவம் உதவியாக இருந்தது. இப்படத்தை திட்டமிட்ட பொருட்செலவில் எடுத்துள்ளோம். என்றார்.