இமான் பெயரை மறந்த அண்ணாத்த குழுவினர்
ADDED : 1607 days ago
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. கடந்த ஜனவரி மாதமே இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என அறிவித்தார்கள். அன்றைய தினத்தில் வேறு எந்த படங்களும் போட்டிக்கு வரக் கூடாது என்பதைத் தவிர்க்க மீண்டும் படம் நவம்பர் 4ம் தேதிதான் வெளியாகிறது என்பதை நேற்று உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதற்காக படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க இசையமைப்பாளர் இமான் பெயர் மட்டும் காணவில்லை. போஸ்டரை எத்தனை முறை ஜும் செய்து பார்த்தும் அவரது பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் இமான். முதன் முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு இசையமைத்து வருகிறார். அவரது பெயரை படக்குழுவினர் எப்படி மறந்தனர் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
ஆனால், இது பற்றி தன்னுடைய வருத்தம் எதையும் இமான் பதிவு செய்யவில்லை.