உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு வழக்குகள் தான் தள்ளுபடி : 'இந்தியன் 2' வழக்கு தொடரும்

இரண்டு வழக்குகள் தான் தள்ளுபடி : 'இந்தியன் 2' வழக்கு தொடரும்

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' பட விவகாரம் இன்னமும் நீண்டு கொண்டே போகிறது. 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல், தெலுங்குப் படத்தை அடுத்து இயக்கத் தயாராகி வந்தார் இயக்குனர் ஷங்கர். அதோடு ஹிந்திப் படம் ஒன்றை இயக்கும் அறிவிப்பையும் வெளியிட்டார்.

தங்களது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கர் போகக் கூடாது, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஒரு வழக்கையும், உத்தரவாதத் தொகை செலுத்த வேண்டும் என்று மற்றொரு வழக்கையும் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்தது லைகா நிறுவனம்.

மேற்கண்ட இரண்டு வழக்குகளை மட்டுமே நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், 'இந்தியன் 2' சம்பந்தப்பட்ட வழக்குகளும் சேர்த்து தள்ளுபடி செய்யப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஷங்கர் தரப்பு கொண்டு சென்றது.

'இந்தியன் 2' படத்தை முடிக்க வேண்டிய விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கர் தரப்பிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதியை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் இரு தரப்பிற்கு இடையிலும் பேச்சு வார்த்தை நடத்தி அறிக்கை அளித்த பிறகுதான் 'இந்தியன் 2' வழக்கு மீதான தீர்ப்பு வரும்.

நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட இரண்டு வழக்குகளால் ஷங்கர் தெலுங்கிலும், ஹிந்தியிலும் படங்களை இயக்க எந்தத் தடையும் இல்லை என்பது மட்டுமே ஷங்கர் தரப்பிற்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். அதே சமயம் 'இந்தியன் 2' விவகாரத்தில் எந்த மாதிரியான தீர்ப்பு வரும் என்பது இனிமேல் தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !