உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை திரும்பும் ரஜினிகாந்த் : விரைவில் அடுத்த பட அறிவிப்பு

சென்னை திரும்பும் ரஜினிகாந்த் : விரைவில் அடுத்த பட அறிவிப்பு

தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், தான் அரசியலில் இறங்கப் போவதில்லை என சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே அவர் அறிவித்துவிட்டார். ஒரு பக்கம் அந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பதால் மறுபக்கம் ஆறுதலையும் தந்தது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வரும் ரஜினி, கடந்த மாதம் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றார். இந்நிலையில் நாளை அவர் அமெரிக்காவிலிருந்து திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் நடிக்க உள்ள படம் பற்றிய ஆலோசனையை அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே முடித்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியது. அவரது அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர்தான் இயக்கப் போகிறார் என திரையுலகத்தில் சொல்லி வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் யார் யார் என்பது எல்லாமே முடிவாகிவிட்டதாம்.

இவரா, அவரா என சில பெயர்கள் வந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை எதுவும் நடக்கலாம். இருப்பினும் ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சீக்கிரமே வெளிவரும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !