உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா : பெப்சி வேண்டுகோள்

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா : பெப்சி வேண்டுகோள்

திரைப்படங்களை ஒழுங்குபடுத்தும் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். பின்னர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

காலமாற்றத்திற்கு ஏற்ப அரசு திரைப்படங்களைத் தணிக்கைச் சட்டங்களை மாற்ற புதிய வரைவு கொண்டுவர உள்ளதாக அறிந்தோம். ஓடிடி, வெப் சீரிஸ் இணையம் எனத் திரையரங்குகள் அல்லாமல் பல்வேறு விதமான சாதனங்கள் தோன்றிவிட்ட தற்போதைய கால சூழலில் ஆபாசங்கள் மற்றும் அநாகரிகம், வன்முறைகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க தணிக்கை முறையில் சில மாற்றங்கள் அவசியம் ஆகும்.

ஆயினும் இந்தப் புதிய வரைவுத் திருத்தங்கள் மூலம் படைப்பாளியின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்ற எங்கள் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். இந்தத் தணிக்கை வரைவு திட்டத்திற்கு எதிரான கருத்துகள், அரசிற்கு எதிரான கருத்துகள் அல்ல. அரசு ஒரு செயலைச் செய்ய முனையும்போது அதனைப் பற்றிய விமர்சனங்கள் ஆகும்.

ஒருமுறை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் எப்பொழுது வேண்டுமானாலும் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யலாம் என்ற அபாயகரமான விதியையோ அல்லது தணிக்கை செய்கின்ற அதிகாரத்தை அரசிடமோ அல்லது அரசுக்கு ஆதரவான அமைப்பிடமோ தந்துவிட வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !