3 பாடலே அதிகம் : பவன் கல்யாணுக்கு த்ரிவிக்ரம் சீனிவாஸ் ஆலோசனை
மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் - பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணும் ராணாவும் நடிக்கின்றனர். இந்தப்படத்தை சாகர் கே.சந்திரா என்பவர் இயக்குகிறார். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதும் பொறுப்பை பிரபல இயக்குனரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் ஏற்றுள்ளார்.
மூலக்கதையை பாதிக்காத வண்ணம், அதேசமயம் தெலுங்கிற்கு ஏற்றபடி கதையில் சில மாற்றங்களை செய்துள்ளாராம் த்ரிவிக்ரம் சீனிவாஸ். தெலுங்கு படங்கள் என்றாலே குறைந்தது ஆறு பாடல்களாவது இடம் பெறுவது வழக்கம்.. ஆனால் இந்தப்படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்வதால் அதன் சுவாரஸ்யம் குறையாமல் இருக்க மூன்று பாடல்கள் மட்டும் போதும்.. சொல்லப்போனால் அதுவே அதிகம் தான் என பவன் கல்யாணிடம் முன்கூட்டியே தனது ஆலோசனையை தெரிவித்து விட்டாராம் த்ரிவிக்ரம் சீனிவாஸ்.