'அசுரன்' படத்திற்கு ஈடு கொடுக்குமா தெலுங்கு 'நரப்பா'?
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. அப்படத்தை தெலுங்கில் வெங்கடேஷ், பிரியா மணி மற்றும் பலர் நடிக்க 'நரப்பா' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்கள். இப்படம் அடுத்த வாரம் ஜுலை 20ம் தேதியன்று அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இன்று இப்படத்தின் டிரைலரை யு டியூப் தளத்தில் வெளியிட்டார்கள். டிரைலரைப் பார்த்ததும் 'அசுரன்' படத்தில் இருந்த அந்த கலரை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
'சிவசாமி' என்ற 50 பிளஸ் கதாபாத்திரத்தில் 30 பிளஸ் தனுஷ் நடித்தது பெரிதாகப் பேசப்பட்டது. படத்தில் இரு மகன்களுக்கு அப்பாவாக அவ்வளவு யதார்த்தமாக நடித்திருந்தார் தனுஷ். அதுவே அருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
தெலுங்கில் அந்த 50 பிளஸ் கதாபாத்திரத்தில் 60 வயதான வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் அழகான ஹீரோவாகவே வலம் வந்த வெங்கடேஷ் ஒரு கிராமத்து மனிதராக இந்த 'நரப்பா' படத்தில் தன்னுடைய தோற்றத்திலேயே வித்தியாசமாகத் தெரிகிறார்.
'அசுரன்' படமாக்கப்பட்ட சில இடங்களில்தான் 'நரப்பா' படமும் படமாக்கப்பட்டிருக்கிறது. இன்று வெளியான டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் 'அசுரன்' அளவிற்கு தெலுங்கு 'நரப்பா' பெயர் வாங்குவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.