அபி டெய்லர் இன்று முதல் ஒளிபரப்பு
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் அபி டெய்லர். இதில் ரேஷ்மா முரளிதரன் அபி டெய்லராக நடிக்கிறார். அசோக் ஹீரோவாக நடிக்கிறார். ஆடை வடிமைக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், சாதாரண டெய்லருக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் கதை.
அபியின் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையாக படவா கோபி நடிக்கிறார். தங்கையாக ஜெயஸ்ரீ நடிக்கிறார். பஷீர் இயக்குகிறார். தொடர் பற்றி அவர் கூறியதாவது: அபி டெய்லர் என்பது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும். தைரியத்துடனும், திடமனதுடனும் ஒரு கார்ப்பரேட் நிறுவன பெருமுதலாளியை துணிவுடன் எதிர்கொள்கின்ற அபி என்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்தான் கதை.
அபியும் மற்றும் அவளது கதையும் பல இளம் பெண் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதாபாத்திரத்தோடு ஒரு சகோதரிபோல் இணைகின்ற உணர்வு அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் நான் கருதுகிறேன். என்றார்.
இந்த தொடர் இன்று முதல் (ஜூலை 19) முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.