உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விறுவிறுப்பாகும் ஓடிடி வெளியீடுகள்...

விறுவிறுப்பாகும் ஓடிடி வெளியீடுகள்...

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு நான்கு மாதங்களுக்கும் மேலாகிறது. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தியேட்டர்காரர்களுக்கும் தெரியவில்லை.

விசாரித்துப் பார்த்த வகையில் ஒரு சாரார் ஆகஸ்ட் மத்தியில் திறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள், மற்றொரு சாரார் தீபாவளிக்குத்தான் திறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்றாலும் ஓடிடி தளங்களில் கடந்த நான்கு மாதங்களில் அதிகமான படங்கள் வெளியாகவில்லை.

ஆனால், தற்போது பல படங்களை ஓடிடி தளங்கள் பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வாழ் படம் மூலம் புதிதாக களமிறங்கிய சோனி லிவ் ஓடிடி தளம் பல படங்களை பேசிக் கொண்டிருக்கிறதாம். அதோடு தெலுங்கில் அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஆஹா ஓடிடி தளமும் தமிழில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாம்.


ஏற்கெனவே, தமிழில் வெளியான சில படங்களின் தெலுங்கு டப்பிங் உரிமையை அவர்கள் வாங்கி வெளியிட்டுள்ளார்கள். இப்போது நேரடியாக தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிட பேச்சு வார்த்தையை ஆரம்பித்துவிட்டார்களாம். பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து வரும் படங்களை பேசி முடித்துவிட்டதாகத் தகவல்.

இப்படி புதிய நிறுவனங்கள் களத்தில் குதித்து படங்களைப் பேசும் போது ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ 5 ஆகியவையும் ஒருவருக்கொருவர் முட்டி மோதுவதால் சில குறிப்பிட்ட இயக்குனர்கள், நடிகர்களின் படங்களுக்கு டிமான்ட் அதிகரித்துள்ளது.

ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான விலையை தர சம்மதிப்பதால் அவர்களும் படங்களைத் தர முன் வருகிறார்கள். இந்த ஓடிடி தளங்களின் போட்டி காரணமாக தியேட்டர் தொழிலுக்கு பாதிப்புகள் அதிகம் என பலர் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.


தியேட்டர்களை மீண்டும் திறந்தால் பெரிய நடிகர்கள் சிலரின் படங்களைத் தவிர வேறு படங்களை வெளியிட வாய்ப்பு குறைவுதான். அதனால் பல தியேட்டர்களைத் திறக்க முடியாத ஒரு சூழலும் வரலாம்.

இப்போதைய நிலவரப்படி, ஏற்கெனவே வெளிவந்த சில அறிவிப்புகளைத் தவிர, “கடைசி விவசாயி, நரகாசூரன், ஜெய் பீம்” உள்ளிட்ட சில படங்களின் அறிவிப்புகள் விரைவில் வரலாம்.

அதோடு தமிழில் உள்ள முன்னணி டிவி தரப்பில் சில படங்களை நேரடியாக டிவியில் வெளியிடுவதற்கம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் உள்ளிட்ட சில படங்களை அவர்கள் வாங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் ஓடிடி தளங்கள், மறுபக்கம் டிவிக்கள் புதிய படங்களை போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு அளித்தால் தியேட்டர்களைத் தேடி அவர்கள் எப்படி வருவார்கள் என்ற சந்தேகம் வலுவாக வருகிறது.

கொரோனா 3வது அலை சில நாடுகளில் பயமுறுத்திக் கொண்டுள்ள சூழலில், இந்தியாவிலும் அது குறித்த எச்சரிக்கை உணர்வு அதிகமாகி வருகிறது.

தியேட்டர்கள் குறித்த கட்டணம், உணவு பண்டங்களின் அதிக விலை, பார்க்கிங் கட்டண விலை ஆகியவை மக்களை கடந்த சில வருடங்களாக பயமுறுத்தி தியேட்டர்கள் பக்கம் அவர்களை வர வைப்பதை குறைத்துவிட்டது. அப்படிப்பட்டவர்களை ஓடிடிக்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மை.

தியேட்டர்காரர்கள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்ள, மக்களை மீண்டும் தங்கள் பக்கம் பழையபடி வரவழைக்க, இப்போதே ஏதாவது முடிவெடுக்க வேண்டும் என அத்தொழில் சார்ந்தவர்கள் கருதுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !