உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர் ராஜ்குமார் பேத்தி தன்யா

தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர் ராஜ்குமார் பேத்தி தன்யா

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். அவரது குடும்பத்தில் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர்.

அந்தக் குடும்பத்திலிருந்து தற்போது மற்றுமொரு வாரிசு தமிழில் நடிக்க வருகிறார். ராஜ்குமாருக்கு, லட்சுமி, பூர்ணிமா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். பூர்ணிமாவின் மகள் தான் தன்யா. இவர் கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள நின்ன சனிஹகே படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாக உள்ளது.

அடுத்து தன்யா தமிழ்ப் படம் ஒன்றில் அறிமுகமாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாம். அது பற்றிய விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.


தன்யா கன்னடத்தில் அறிமுகமாகும் நின்ன சனிஹகே படத்தை அறிமுக இயக்குனர் சுமன் இயக்கியுள்ளார். இவர் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இப்படத்தில் சூரஜ் கவுடா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை நகைச்சுவை கலந்த காதல் படமாக எடுத்துள்ளார்களாம்.

தனது மகள் கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக ஒப்பந்தமான போது அவரது அம்மா பூர்ணிமா, “தன்யாவுக்கு மாடலிங் மீதுதான் எப்போதும் ஆர்வம். அவள் சினிமாவில்தான் ஈடுபட வேண்டும் என நாங்கள் எப்போதும் பேசியதேயில்லை. ஆனால், மக்கள் அவரை சந்திக்கும் போதெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்பின்தான் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இப்போது கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !