பல புதுமையான சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது விஜய் டிவி. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அத்தொலைக்காட்சியின் புதிய சீரியலின் புரோமோ ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விஜய் டிவியில் தென்றல் வந்து என்னைத் தொடும் என்கிற புதிய தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் வெளிநாடு சென்று படித்து விட்டு சொந்த ஊருக்கு வரும் நாயகி கோவிலுக்கு வருகிறார். அங்கு கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்ட ஒரு ஜோடியை அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்யும் நாயகன் கட்டிய தாலியை பறிக்க முயல, அவரை அடித்து விடுகிறார் நாயகி. அதோடு அம்மன் சாட்சியாக கட்டிய தாலியை நீ எப்படி பறிக்கலாம் என நாயகி கேட்க, ஆத்திரத்தில் கோவிலில் அம்மன் கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்து நாயகியின் கழுத்தில் போட்டு, நெற்றியில் திலகமும் இட்டு, நான் இப்போது இந்த மஞ்ச கயிறை உன் கழுத்தில் போட்டுவிட்டேன், நீ என் பொண்டாட்டியா என கேட்கிறார்.
இந்த புரோமோவை பார்த்த பார்வையாளர்கள் இது மிகவும் பிற்போக்குத்தனமானது என சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‛‛இந்த மாதிரி நிஜத்துல நடந்தா அவனை ஊர்காரனுங்க எல்லாம் சேர்ந்து அடி வெளுத்திடுவானுங்க பொறுக்கித்தனம் பன்றவனை அந்த பொண்ணு திருத்தி சரி பண்ணுவா ஏன்டா இப்படியெல்லாம் மட்டமா சீரியல் எடுத்து எங்க உயிரை வாங்குறீங்க என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ‛‛அடே டிவி தன் வயர்லயே தானே தூக்கு போட்டு தொங்குற அளவுக்கு கதை எழுதுறிங்கடா.எங்கல ஏன்டா இப்படி கொலையா கொல்லுறிங்க என பதிவிட்டுள்ளார். இன்னொருவர், ‛‛இன்னும்மாடா இதெல்லாம் காவியம்னு எடுத்துட்டு இருக்கீங்க.. என பதிவிட்டுள்ளார்.
மேலும், இதை கவனித்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ், பொது வெளியில் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு வழங்கும் தண்டனைகளை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், பிரிவு 4-ன் படி, கல்வி நிலையங்கள், கோயில் மற்றும் இதர வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், சாலை, ரயில்வே நிலையம், சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா நடக்கும் இடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் பெண்களை துன்புறுத்துவர்கள் மீது, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்தது 10,000 ரூபாய் இழப்பீடும் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.